
திண்டுக்கல்லில் நடைபெற்ற கோவில் விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டும் பங்கேற்று நேர்த்திக்கடனாக ஆடுகளைப் பலியிட்டுப் பக்தர்களுக்கு வழங்கும் விநோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் ஆடுகள் நேர்த்திக் கடனாகக் கோயிலுக்கு வழங்கப்படும்.
இவ்வாண்டிற்கான திருவிழாவையொட்டி இரவு 1 மணிக்குப் பொங்கல் வைத்து வழிபாடு துவங்கப்பட்டது. பின்னர் நேர்த்திக் கடனாகச் செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்தக் கறி விருந்து அங்குக் கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்குச் சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாகப் பறிமாறப்பட்டது.
இன்று நடந்த கறி விருந்தில் நத்தம், புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

