Arignar Anna 55th Anniversary: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயினில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயினில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உடன் இருந்தனர்.

இது தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவில், “ தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்! என்றென்றும்_அண்ணா” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “ அயல்நாட்டில் இருந்தாலும், என் எண்ணமெல்லாம் நாளை பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவர்தம் அன்புத்தம்பியர் அணிவகுக்கும் அமைதிப் பேரணி மீதே இருக்கிறது. அமைதிப் பேரணியில் நம் அன்பு உடன்பிறப்புகள் அலையலையாய் வங்கக் கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே ஸ்பெய்னில் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மலர்தூவி உங்களில் ஒருவனான நானும் மரியாதை செலுத்துகிறேன்.

முன்பு ஜப்பான், இப்போது ஸ்பெய்ன் என எங்குச் சென்றாலும் அந்நாட்டினர் ஆதிக்க மொழிக்கு இடந்தராமல் தாய்மொழிக்கு முதன்மை அளிப்பதைப் பார்க்கையில் நம் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையிலான இருமொழிக் கொள்கைதான் என் நினைவுக்கு வருகிறது. அதேபோல, பேரறிஞர் ‘அண்ணாவின் உயில்’ என்று கூறப்படும் இறுதி மடலில் அவர் கூறியபடி ஓர் உண்மையான கூட்டாட்சி அமைய வரும் தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்! அதற்காக அண்ணா வழியில் அயராது உழைத்திடுவோம்!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *