விறகு லாரி வர்றது தெரியாமல் மோதிய ஆம்புலன்ஸ்!

Advertisements

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில், ஆம்புலன்சில் இருந்த நோயாளி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மோசமான விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் வரிசைகனி. 65 வயதான இவருக்கு, நேற்றிரவு திடீரென உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது.

ஆம்புலன்ஸ்:

இதையடுத்து உடனடியாகத் தமுமுக அமைப்பினை சேர்ந்த ஆம்புலன்ஸை குடும்பத்தினர் வரவழைத்து, அதில், வரிசைகனியை ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த ஆம்புலன்ஸ் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, விறகு ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறத்தில் படுவேகமாக மோதியது. வாலாந்தரவை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிவிட்டு, அந்த லாரி அப்போதுதான் வெளியே வந்தது. ஆனால், லாரி வருவது தெரியாமல், அதன் பின்புறத்தில் திடீரென ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகி, வாகனத்தில் இருந்த அனைவருமே சிக்கினார்கள்.

நோயாளி:

இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்… ஆனாலும், ஆம்புலன்ஸில் சிகிச்சைக்குச் சென்ற நோயாளி வரிசைகனி மற்றும் அவருடன் சென்ற சகுபர் சாதிக் (47), அனீஸ் பாத்திமா (40) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், ஆம்புலன்ஸில் பயணித்த ஹர்ஷத், கதீஜா ராணி, ஆயிஷா பேகம் உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் ஷர்ஷத் நிலைமை மோசமாகியிருப்பதால், மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை:

மற்றவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ராமநாதபுரம், கேணிக்கரை போலீஸார் விபத்துகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு துவக்கத்திலேயே இப்படியொரு சோகமா? என்று பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகிய 2 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். ஆனால் மருத்துவமனை 2வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தனியார் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து எப்படி நடந்தது:

ஆம்புலன்ஸ் அதிவேகமாக லாரியின் பின்பகுதியில் மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் அருகே உட்கார்ந்திருந்த சகுபர் சாதிக் வாகனத்தில் சிக்கிக்கொண்டார். அவரைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி வாகனத்திலிருந்து மீட்டனர். மேலும் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்தத் திடீர் விபத்து ஏற்பட்டதால் ஆம்புலன்ஸுக்கு பின்னால் வந்த ஆம்னி சொகுசு பஸ் மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *