Adi Kumbeswarar Temple: சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும்!

Advertisements

எல்லாம் அவன் செயல்.. இந்த அவன் யாரென்றால்  நம்மை  காப்பவன். அவரவர் வழிபாடு செய்ய சிறப்பான கோவிலுக்கு செல்வர். அதில் இன்று நாம் கும்பேஸ்வரர் கோவிலைப் பற்றி காணலாம்..

தல வரலாறு:

இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோவிலில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நாயக்கர்களால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கும்பகோணம் நகரத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குவது இக்கோவிலே.

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம்.

சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.

ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் உடையது. கிழக்கிலுள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரமுடையதாகும். இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன குடவடிவம் உடையவர் என்பதால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. பௌர்ணமை நாட்களில் மட்டும் புணுகு சாத்தி வழிபாடு செய்யப்படும். கொடிக் கம்பத்திற்கருகில் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் சந்நிதி இருக்கிறது. இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள சித்திர நடன மண்டபமும் அதிலுள்ள சிறப வேலைப்பாடுகளும் காணத் தக்கவையாகும்.

மகாமகக் குளம்:

கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர்.

காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.

இத்தலத்தில் அநேக சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதி, வல்லப விநாயகர் சந்நிதி, அறுபத்துமூவர் திருமேனிகள், உற்சவ மூர்த்தங்கள், வீரபத்திரர், சப்தகன்னியர், அஷ்டலிங்கங்கள் முதலிய சந்நிதிகள், சோமாஸ்கந்தர் சந்நிதி, வலஞ்சுழி விநாயகர், மகாலிங்கேசுவரர், பிட்சாடனர், சண்முகர், கார்த்திகேயர், சிவலிங்கமூர்த்தங்கள். அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் என்ற் ஏராளமான சந்நிதிகள். அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த மூர்த்தியாக – கிராதகோலத்தில் காட்சி தரும் இறைவன், பைரவர், மூன்று திருவடிகளுடன் ஜ்வரஹரேசுவரர் ஆகியோரின் திருவுருவங்களையும் நாம் இங்கே காணலாம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். கும்பேஸ்வரருக்குப் பினபுறம் முருகப் பெருமான கார்த்திகேயன் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். ஆறு திருமுகங்களும், ஆறு திருக்கரங்களும் கொண்டு மயிலின் முன்னே தனது தேவியர் இருக்க எழுந்தருளியுள்ளார். ஆறு திருமுகங்களும், ஆறு திருக்கரங்களும் கொண்டு விளங்கும் முருகப் பெருமான் தமிழகத்தில் குடந்தையில் மட்டுமே காட்சி தருகிறார். கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சுவாமி சந்நிதி உள்ளது. இம்மூர்த்தி தெய்வீகப் பொலிவுடன் காட்சி தருகின்றார்.

தமிழ்நாடு கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இத்தலம் இருக்கிறது. திருகுடந்தை கீழ்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம் என்ற மேலும் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு சாரங்கபாணி கோவிலும் கும்பகோணம் நகரில் உள்ளது. சுற்றுலா தளம் ஆகும். தினமும் ஆயிரகணக்கானோர் வழிபாடு செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை  தருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *