Advertisements

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையிலான சந்திப்பின் போது பேசப்பட்டது தொடர்பாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுகவிடம் பாஜகவுக்கு சுமார் 56 தொகுதிகளும், 3 அமைச்சர் பதவியும் கேட்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை கூறுவதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். திருச்சியில் 2 நாள் முகாமிட்ட போது அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வரவில்லை. இதனால் பாமக கூட்டணியை உறுதி செய்த பின், எடப்பாடி பழனிசாமி உடனடியாக டெல்லிக்கு விமானம் ஏறினார்.
நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உடனிருந்திருக்கிறார். அப்போது பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது அமித்ஷா தரப்பில் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
டிடிவி தினகரனுக்கான தொகுதி பங்கீட்டை பாஜகவிடம் விட்டுவிடவும் தெரிவித்திருக்கிறார். அமமுகவுக்கான தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கிவிடலாம் என்றும், பாஜக தரப்பில் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே காலையில் டெல்லியில் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க பேச்சுகள் நடப்பதாக எடப்பாடி சூசகமாக கூறி இருந்தார். அதேபோல் மொத்தமாக பாஜகவுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், 3 அமைச்சர் பதவியை பாஜகவிற்கு அளிக்க வேண்டும் என்று அமித்ஷா டிமாண்ட் வைத்துள்ளார். ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அமித்ஷா விடாபிடியாக இருந்ததால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு முடிவு எடுப்பதாக கூறி வந்துள்ளார். அமித்ஷா டிமாண்ட் வைத்த போதே, தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள் என்றும் கூறி இருக்கிறார். இறுதியாக ஜனவரி இறுதிக்குள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்கவும் அமித்ஷா தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Advertisements



