ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 10 பேர் கைது!

Advertisements

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 10 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.67,100 மதிப்புள்ள 27 டிக்கெட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாகக் காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று (மே 12) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (CSKvsRR) அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி பகல் ஆட்டமாக நடைபெற்றது.

மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) விற்பனை செய்பவர்களைக் கண்காணித்து கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின் பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

திருவல்லிக்கேணி (D-1)காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த மே 11 மற்றும் மே 12 ஆகிய 2 நாட்கள், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தீவிரமாகக் கண்காணித்து, அங்குக் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாகக் கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்து, பரத்குமார் (22), குருபிரசாத் (23), ஆலன்ராஜ் (18), சுரேஷ்குமார் (23), மணிகண்டன் (26), ஜீவானந்தம் (26), சூர்யா (23), சல்மான் காதர் (19), யுவராஜ் (31), கிஷோர் (25), ஆகிய 10 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 நபர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.67,100 மதிப்புள்ள 27 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி 10 நபர்கள்மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *