எகிறி வரும் தக்காளி விலை காரணமாக, அதிகம் கேள்விப்பட்டிராத விநோதங்கள் பலவும் அரங்கேறி வருகின்றன.
இடையில் குறைவதுபோல போக்குக்காட்டிய தக்காளி விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தக்காளி விலையின் தாக்கம் அதிகரித்திருக்கும் வட மாநிலங்களில் அதையொட்டிய விநோதங்களும் அதிகரித்துள்ளன.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஸ்மார்போட் விற்பனை கடைகள் இலவச இணைப்பாக தக்காளி வழங்கி வருகின்றன. அசோக் நகரில் அபிஷேக் அகர்வால் என்பவர் ్ణஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்్ణ என அறிவித்தார். இதனையடுத்து இதர ஸ்மார்ட்போன் கடைகளும் தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், அஜய் ஃபாஜி என்ற தக்காளி வியாபாரி தனது தக்காளி கடைக்கு பவுன்சர்களை பாதுகாப்புக்கு நிற்க வைத்திருக்கிறார். வழக்கமாக விஐபிக்களின் பாதுகாப்புக்கு என ஏற்பாடாகும் இந்த பவுன்சர்கள், காலத்தின் கோலத்தால் தக்காளி கடை வரை இறங்கி வந்திருக்கின்றனர்.
உபியில் தக்காளி விலை ரூ160க்கு மேல் அதிகரித்திருப்பதால், நல்ல தக்காளிக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் தக்காளியை பதம் பார்த்து பொறுக்குவோர், பேரம் பேசுவோர், ஓரிரு தக்காளியை கமுக்கமாய் அமுக்கிச் செல்வோர் என எழுந்த பிரச்சினைகளை சமாளிக்க பவுன்சர்களை நியமித்திருப்பதாக அஜய் ஃபாஜி தெரிவித்திருக்கிறார். இவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என்பதால், மிகைப்படுத்தி விளம்பரம் சேர்க்கிறார் என்று சிலர் குற்றம்சாட்டினாலும், தக்காளி விலைவாசி உயர்வை ஒட்டிய நிதர்சன பிரச்சினைகளை எவரும் மறுக்கவில்லை.
எகிறும் தக்காளி விலை இன்னும் என்னென்ன விசித்திரங்களை வெளிப்படுத்துமோ தெரியவில்லை