இந்திய அணியில் தனது பெயரை ரோகித் சர்மா நிலை நிறுத்தவில்லை! கேப்டன் பதவி குறித்து கவாஸ்கர் அதிருப்தி!

Advertisements

விராட் கோலிக்கு பிறகு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெற்றுக் கொடுத்த அவரால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் சாதிக்க இயலவில்லை. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை. அரைஇறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இதேபோல் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தோல்வியை தழுவியது.

Advertisements

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. 2 டெஸ்ட் கொண்ட தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஐ.பி.எல். கோப்பையை 5 முறை கைப்பற்றிய ரோகித் சர்மா. இந்திய அணியில் தனது பெயரை நிலை நிறுத்தவில்லை. அவரிடம் இருந்து நான் அதிகம் எதிர்பார்த்தேன். இந்தியாவில் விளையாடுவதும், வெளிநாட்டில் ஆடுவதும் மாறுபட்டதாகும்.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீரர்கள் தேர்வு, அணியை நடத்திய விதமும் ஏமாற்றத்தை கொடுத்தது. இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *