
காமராஜரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் முக்தார் அஹமது என்பவர் இந்தியா 24×7 என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் காமராஜர் மற்றும் நாடார் சமுதாய தலைவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோக்கள் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் சார்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு இன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், முக்தார் அகமதுவும் இன்னொரு கிறிஸ்தவ மத போதகரும் இணைந்து காமராஜரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
காமராஜர் தான் கட்டிய அணைகளில் ஊழல் செய்தார் என்றும் அந்த அணைகள் சிறியதாக இருந்ததால் அவ்வப்போது உடைந்ததாகவும் அவதூறு செய்திகளை முக்தார் என்பவர் வெளியிட்டுள்ளார்.
அவர் மீதும் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


