திரையரங்குகளில் யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை – திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் !

Advertisements

சென்னை: 

திரையரங்குகளில் யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது எனத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், திரைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களை வைக்கும் யூ டியூப் சேனல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன்மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள்மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தைச் சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளைச் சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்படத்துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது. அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள்மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும்.

விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போலப் பலர் பேசி வருவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கருதுகிறோம்.விமர்சகர்களுக்குத் திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தைப் பற்றிய வெறுப்பை ஊடகங்களில் விதைக்கக் கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்துத் திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும்.

திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறிக் கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதைத் தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்துச் செல்வது மிகவும் கண்டிக்கதக்கது.சமீபத்தில், ‘கங்குவா’ திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர். ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தைகைய கருத்துக்களை பதிவு செய்து. மக்களிடம் அதைப் பெரிய அளவில் கொண்டு சென்ற YouTube Channelகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, உணவு நன்றாக இல்லாத பட்சத்தில், வெளியே வந்து அந்த ஓட்டல் பற்றி ஊடங்களில் ஏதோ தன் வாழ்க்கையே அதனால் நாசமானது போல யாரவது பேசி இருக்கிறார்களா? அவ்வாறு பேசி இருந்தால், அந்த ஓட்டல் தான் சும்மா விட்டிருப்பார்களா? சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்தச் செயல்களை  உடனே தடுத்து நிறுத்து வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது. திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும் எந்த YouTube Channel பார்வையாளர்கள், ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களைப் பற்றிப் பேட்டி எடுக்கத் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது. Public Review மற்றும் Public Talk என்கிற பெயரில் பார்வையாளர்களைத் திரைப்படங்கள்மீதும் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்தப் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

திரைப்படங்களைத் தார்மீக முறையில் விமர்சிக்காமல், தனிமனித தாக்குதல்கள், வன்மத்தை கக்குதல் போன்ற செயல்களை ஊடகங்கள்மூலம் செய்யும் நபர்கள் மற்றும் ரசிகர்கள்மீது சட்ட ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channelகள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையைத் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *