
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ‘கேடட்’ சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக இளம் வீராங்கனைக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கஜகஸ்தான், நாட்டின் அல்மாட்டியில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக கேடட் சாம்பியன்ஷிப் தொடரின், 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழகத்தின் அரியலூரை சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்நிலையில்,நாட்டில் இருந்து டெல்லி வழியாக தாயகம் திரும்பிய ஷர்வானிகாவுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஷர்வானிகா, கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறிய அவர், தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்றும், செஸ் விளையாட்டில் இன்னும் நான் சாதிக்க வேண்டும் அது தான் என்னுடைய ஆசை என்றார்.
இதனைத்தொடர்ந்து, அவரது தாய் அன்புரோஜா பேசியுள்ளார்.மூத்த பிள்ளை தான் முதலில் செஸ் போட்டியில் விளையாடி வந்ததாகவும், கொரோனா காலத்தில் அவருடன் ஷர்வானிகா துணைக்காக விளையாட ஆரம்பித்து தற்போது இந்த உயரத்தை எட்டி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், துணை முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள் அதுதான் தொடர்ந்து வெற்றி பெற காரணமாக உள்ளது என கூறிய அவர், தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும், தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுப்பதால் இலக்கை எளிதாக அடைய முடிகிறது என்றார்.
