
விழுப்புரம் : விழுப்புரத்தில் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் வட்டார போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மாதா கோயில் பேருந்துநிறுத்தம் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட குழு பள்ளி மாணவ, மாணவிகளை அதிகமாக ஏற்றிச்செல்லும் வாகனங்களை திடீர் ஆய்வு செய்து 5 ஆட்டோ ரிக்ஷாக்களை சிறைபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வாகனங்கள் தகுதிச் சான்று மற்றும் காப்புச் சான்று நடப்பில் இல்லாதது சோதனையில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சோதனை செய்து 40க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றியும், மூன்று தனியார் பேருந்துகள் மூன்று அரசு பேருந்துகளுக்கு காற்று ஒலிப்பான் பொருத்தி பயன்படுத்தியதற்கு சோதனை அறிக்கை வழங்கியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக அபராதமாக ரூ.1,25,000 விதிக்கப்பட்டது.

