Urvashi Rautela Birthday Celebration: தமிழில் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஊர்வசி ரவ்துலா தங்க கேக் வெட்டிப் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவ்துலா. இவர் தமிழில் தொழிலதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிக்க முதலில் படக்குழு அணுகியது நயன்தாராவை தான். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு வழங்கப்பட இருந்த அதே தொகையைக் கொடுத்து ஊர்வசி ரவ்துலாவை ஹீரோயினாகக் கமிட் செய்தனர்.
நடிகை ஊர்வசி ரவ்துலா அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. இவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ஐ காதலிப்பதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். பின்னர் அவர் இதைப் பப்ளிசிட்டிக்காகச் செய்வதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து அவரைச் சாடினர். இதுதவிர இன்ஸ்டாகிராமிலும் செம்ம ஆக்டிவாக உள்ள ஊர்வசிக்கு மில்லியன் கணக்கில் பாலோவர்களும் உள்ளனர். அவர்களைக் கவரும் வகையில் அதில் புகைப்படங்களையும் பதிவிடுவார்.
அந்த வகையில் நேற்று தன்னுடைய 30-வது பிறந்தநாளை கொண்டாடினார் ஊர்வசி ரவ்துலா. அவருக்குச் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன. இதையடுத்து ஷூட்டிங்கில் பிசியாக இருந்த அவர் லவ் டோஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். நடிகரும், பாடகருமான ஹானி சிங் உடன் சேர்ந்து ஊர்வசி ரவ்துலா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், நடிகை ஊர்வசி ரவ்துலா தன்னுடைய பிறந்தநாளுக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை தான் வெட்டி இருக்கிறார். அந்தத் தங்க கேக்கின் விலை மட்டும் ரூ.3 கோடியாம். ஹானி சிங் தான் இந்தக் கேக்கை நடிகை ஊர்வசி ரவ்துலாவுக்கு பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது. பிறந்தநாளுக்கு நடிகை ஊர்வசி ரவ்துலா ரூ.3 கோடி மதிப்புள்ள கேக் வெட்டியுள்ளது தான் தற்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.
