Udhayanidhi Stalin: ராமர் கோயில் திறப்பை திமுக எதிர்க்கவில்லை!

Advertisements

சென்னை: ராமர் கோயில் திறப்பை திமுக எதிர்க்கவில்லை எனவும், மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ எதிர்ப்பு இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வரும் ஜன.,21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டித் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பிலிருந்து சுடர் ஓட்டத்தைத் துவக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது: இந்தச் சுடர் ஓட்டம் இன்று துவங்கி அடுத்த இரண்டு நாட்களுக்குச் சேலம் வரை சுமார் 310 கிலோ மீட்டர் இந்தச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இனி இந்திய வரலாற்றில் இது போன்ற மாநாடு நடத்த முடியாது எனக் காண்பிக்க வேண்டும். கூடி கலைந்த கூட்டம் அல்ல, கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராமர் கோயில் திறப்பு விழாகுறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”ராமர் கோயில் திறப்பை திமுக எதிர்க்கவில்லை. ஏற்கனவே கருணாநிதி சொன்னது போல மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. ராமர் கோயில் வந்தது பிரச்னை அல்ல, அங்குள்ள மசூதியை இடித்து விட்டுக் கோயில் கட்டியதில் திமுக., விற்கு உடன்பாடு இல்லை. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறியதை போல ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒன்றாக்க வேண்டும்” என்றார்.

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லையெனக் கூறியுள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ”அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது” என நக்கலாகப் பதிலளித்தார் உதயநிதி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *