
பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த திருப்பூர்!
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சென்னையை தவிர மேலும் 2 தமிழக நகரங்களும் டாப் 20 நகரங்களில் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதும் நகரம் வாரியாக எந்த நகரத்தில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கின்றனர் என்ற பட்டியலையும் Hurun India வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் பொருளாதார தலைநகராக அறியப்படும் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில் ரூ. 1000 கோடிக்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட 328 பெரும்பணக்காரர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
199 பெரும் பணக்காரர்களுடன் இந்தப் பட்டியலில் நாட்டின் தலைநகரான டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பெங்களூரு இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு 100 பெரும் பணக்காரர்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
87 பெரும் பணக்காரர்களுடன் ஹைதராபாத் இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் மொத்தம் 67 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 55 பெரும் பணக்காரர்களுடன் அகமதாபாத் 6-வது இடத்தில் உள்ளது. 51 பெரும் பணக்காரர்களைக் கொண்ட கொல்கத்தா இந்தப் பட்டியலில் 7-வது இடத்திலும், 39 பெரும் பணக்காரர்களுடன் புனே 8-வது இடத்திலும் உள்ளது. 27 பெரும் பணக்காரர்களைக் கொண்ட சூரத் இதில் 9-வது இடத்திலும், 18 பெரும் பணக்காரர்கள் கொண்ட குருகிராம் 10-வது இடத்திலும் உள்ளது.
சென்னையை தவிர மேலும் 2 தமிழக நகரங்களும் டாப் 20 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. அதன்படி கோவை 12-வது இடத்தில் உள்ளது. கோவையில் 16 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். அதே போல் திருப்பூர் இந்தப் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது. திருப்பூரில் 7 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் திருப்பூர் இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


