
தேனி பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதிச் சம்பவ இடத்திலேயே ஒருவர் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் பலியானார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சருத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாரியப்பன் (வயது 45). இவர் சருத்துபட்டி கிராமத்தில் பலசரக்குகடை வைத்து நடத்தி வருகிறார். இன்று கடைக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காகத் தேனி பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்துள்ளார்.
அப்போது குச்சனூரிலிருந்து தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்து அவர்மீது மோதி அரசு பேருந்தின் பின் சக்கரம் மாரியப்பனின் தலையில் ஏறிச் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தேனி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாரியப்பன் உடலைக் கைப்பற்றித் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடைக்குச் செல்லும் அவசரத்தில் மாரியப்பன் பேருந்து வருவதை கவனிக்காமல் ஒரு பகுதியிலிருந்து எதிர் திசைக்குச் செல்ல நினைத்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பாக நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள்ளேயே பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

