Suicide: மொத்த குடும்பமும் தற்கொலை!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 3 வயதான இரட்டை குழந்தைகள் 2 பேரை விஷம் கொடுத்துக் கொன்று விட்டுப் பெற்றோர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுனு (33). அவரது மனைவி சவும்யா (30). கணவன்-மனைவி 2 பேரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு 3 வயதான ஆதி, ஆதில் என இரட்டைக் குழந்தைகள். இதற்கிடையே சுனு, சவும்யா தம்பதிக்குக் கடன் தொல்லை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இது பக்கத்து வீட்டினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள் விரைந்து சென்று பார்த்து உள்ளனர். அப்போது ஒரு அறையில் ஆதி, ஆதில் ஆகிய 2 பேரும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தனர். இன்னொரு அறையில் சுனுவும், சவும்யாவும் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். இதைப் பார்த்துப் பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆலப்புழா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

அதைத்தொடர்ந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டைக் குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்துக் கொலை செய்தபிறகு கணவன், மனைவி 2 பேரும் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *