Sudhakar IPS : “லஞ்சம் – இதுதான் எல்லோருக்கும் கடைசி எச்சரிக்கை!

Advertisements

”லஞ்சம் வாங்குறதுக்காக டிராபிக் போலீஸ்க்கு வந்திருந்தீங்கன்னா வேற எங்கையாச்சும் போய்டுங்க – எச்சரிக்கை விடுத்த சுதாகர் ஐபிஎஸ்”

சென்னையில் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்த சில போலீசார், அருகே ஒரு வண்டியில் மாட்டியிருக்கும் மஞ்சப்பையில் லஞ்ச பணத்தை போட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனை ஊடகங்கள் காட்சிப்படுத்தி வெளியிட்டன. இது சென்னை போக்குவரத்து காவல்துறைக்கே அவப்பெயரை ஏற்படுத்தியது.

கோபமடைந்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் – அலறிய போலீசார்

இதனைக் கண்டா சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் கடும் கோபமும் வேதனையும் அடைந்துள்ளார். இது போன்று இன்னொரு முறை யாரேனும் எங்கேனும் நடந்துகொள்வது தெரிந்தால் அவ்வளவுதானென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்கி டாக்கி மைக் மூலம் பேசிய சுதாகர் ஐபிஎஸ்

காவலர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கும் வாக்கி-டாக்கி மைக் தொடர்புக்குச் சென்ற சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கடுமையான தொனியில் சென்னையில் உள்ள போக்குவரத்து போலீசாரை எச்சரித்துள்ளார். அந்த ஆடியோவில் “இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டு, வாகன சோதனையில இது மாதிரி பணம் பாக்கனும்னு நெனச்சு டிராபிக் டிப்பார்மெண்டுக்கு வந்துருந்தீங்கன்னா இங்கிருந்து மாறிப் போய்டுங்க, இல்லன்னா ஒன்னு சஸ்பெண்ட் ஆகிடுவீங்க, இல்ல டிஸ்மிஸ் ஆகிடுவீங்க. திரும்பத் திரும்பச் சொல்றேன். உங்க ஒருத்தரால மொத்த டிராபிக் டிப்பார்மெண்டுக்குமே கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்காதீங்க, ரொம்ப அசிங்கமா இருக்கு, இந்த நியூஸ் எல்லாம் பாக்கும்போது ரொம்ப அசிங்கமா இருக்கு.

கடைசி எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ்

ஒரு ஒரு டிராஃபிக் போலீஸ் மரியாதையை கூட்டனும் அப்டிங்கிறத்துக்காக என்னென்னவோ பண்ணிகிட்டு இருக்கோம். இதையெல்லாம் செஞ்சு ஒரு படி மேலே ஏத்துனா, நாலு படி கீழ இறக்கிவிட்டர்றீங்க, இது தான் கடைசி எச்சரிக்கை, எல்லோருக்கும்” என அதில் சுதாகர் ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைப் போக்குவரத்து காவலர்கள் ஏற்று விதிகளின் படியே நடப்பார்களா? அல்லது ஒரு சில நாட்கள் இதனைப் பின்பற்றிவிட்டு மீண்டும் பழைய பல்லவியே பாடுவார்களா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருக்கும் சுதாகர் ஐபிஎஸ் தன்னுடைய உத்தரவை உறுதியாக நடைமுறைப்படுத்திடுவார் என்றும் அதனைப் பின்பற்றாத காவலர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *