
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரியில் உள்ள கழிவறையில் குழந்தை பெற்றெடுத்ததோடு அதனைக் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் பிரசவம் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே கும்பகோணத்தில் அரசுப் பெண்கள் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குத் தஞ்சை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. கும்பகோணம் அரசுப் பெண்கள் கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி வழக்கம்போல் மருத்துவமனையில் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யாரிடமும் சொல்லாமல் திடீரெனக் கழிவறைக்கு சென்றிருக்கிறார் அந்த மாணவி. அங்கு அவருக்குப் பிரசவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பெண் குழந்தை பிறந்து நிலையில் அந்தக் குழந்தையை ஒரு துணியில் சுற்றி கல்லூரியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல வகுப்பறையில் அமர்ந்திருக்கிறார் அந்த மாணவி.
அவரது ஆடைகளில் ரத்தக்கரை இருந்ததை கண்ட சக மாணவிகள் அவரிடம் இதுகுறித்து கேட்டபோது தனக்கு மாதவிடாய் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே ரத்தப்போக்கு அதிகமானதால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனால் அச்சமடைந்த பேராசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாணவி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரைப் பரிசோதனை செய்தபோது சில மணி நேரத்திற்கு முன்பு தான் அவருக்குக் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை அடுத்து பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் அதனைக் கல்லூரியில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டதை தெரிவித்தார்.
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் உடனடியாகக் கல்லூரிக்குத் தகவல் தெரிவித்து குப்பைத் தொட்டியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவிக்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. சிறிது தாமதித்திருந்தாலும் அந்தப் பெண் குழந்தை குப்பை தொட்டியிலேயே மரணத்தைச் சந்தித்திருக்கும்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆடுதுறை மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவி இடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஆண் நண்பருடன் பழகியதால் திடீரெனக் கர்ப்பம் அடைந்ததாகவும், ஆனால் கர்ப்பத்தை கலைக்க முடியாத நிலையிலே தான் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததால் குழந்தையைப் பெற்றெடுத்து அதனை மறைத்து விடலாமென முடிவு செய்ததாகக் கூறி அதிர வைத்திருக்கிறார்.
மேலும். எப்படி பிரசவம் நடக்கிறது என்பது குறித்து யூடிபில் தொடர்ந்து வீடியோக்களைப் பார்த்து வந்ததாகவும் தொடர்ந்து கல்லூரியில் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது யூடியூபில் பார்த்துக் குழந்தையைப் பெற்றெடுத்து அதற்குப் பிறகு அதனைக் குப்பைத் தொட்டியில் வீசியதாகக் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
