
தில்லியில் நிதி ஆயோக் ஆளுமைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
புதுதில்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்து உயிர்பிழைத்த தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காது மூக்கு தொண்டை மருத்துவர் பரமேஸ்வரன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குச் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேஸ்வரனைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இதேபோல நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கத் தில்லி வந்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைக் கேரள இல்லத்தில் சென்று சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துப் பொன்னாடை போர்த்தியுள்ளார்.


