
திண்டுக்கல் மொத்த வெங்காய மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் தரத்தை பொறுத்து கிலோ ரூ.15 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் செயல்பட்டு வருகிறது. 115-க்கும் மேற்பட்ட மண்டிகளுடன் செயல்பட்டு வரும் திண்டுக்கல் வெங்காயச் சந்தை, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மட்டுமன்றி, திருச்சி, திருப்பூா், நாமக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம், திண்டுக்கல் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் மாநிலங்களிலிருந்து பல்லாரியுடன், சின்ன வெங்காயமும் திண்டுக்கல் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.
திண்டுக்கல் வெங்காய சந்தையைப் பொருத்தவரை ஒவ்வொரு சந்தைக்கும் தலா 150 டன் முதல் 250 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 50 கிலோ எடை கொண்ட சின்னவெங்காயம் 9,000 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த சில நாள்களாக வீழ்ச்சியடைந்து வரும் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடந்த திங்கட்கிழமை திண்டுக்கல் சந்தையில் வெங்காயம் கொள்முதல் விலை ரூ.15 முதல் ரூ.25ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஒட்டன்சத்திரம் சந்தையில் அதிகபட்ச கொள்முதல் விலை ரூ.22ஆக இருந்தது. இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ரூ.35ஆக நிா்ணயிக்கப்பட்டது.
வெங்காயத்துக்கு என்றே திண்டுக்கல்லில் செயல்படும் மார்க்கெட்டில் இன்று 5,000 மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியாவுக்கு அதிக அளவில் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதி குறைந்தால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயத்தின் தரத்தை பொறுத்து கிலோ ரூ.15 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது.

