
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 240 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தை செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைப்பார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சுத்தகரிப்பு மையத்தில் 240 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் கூடுதல் மையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தச் சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே என் நேரு, வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவுக்குப் பெய்தால் இயற்கையாகவே தண்ணீர் வடிந்து விடும் அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால் ஒரே நேரத்தில் குறுகிய இடத்தில் அதிகப்படியான மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடக்கூடாது என்பதற்காக டிராக்டர்கள், மின் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒரு நாளைக்கு 240 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நீரானது ஆவடி, பூவிருந்தவல்லி, மாங்காடு, திருமழிசை ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.



