
கஞ்சா வைத்திருந்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாகப் பழனிசெட்டிபட்டி காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 8ம் தேதி 15நாள் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறை மனு செய்திருந்தனர்.
இதனையடுத்து 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு ஜூன் 5ம் தேதிவரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் நீதிமன்றக் காவல் நிறைவடைந்து கோவை மத்திய சிறையிலிருந்து வீடியோ கால்மூலம் விசாரணைக்குச் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனிடையே கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3ம் முறையாக மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்றக்காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டடுள்ளார்.
