
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் துறையினரால் பதியப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு.
பெண் காவலர்கள்குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்த காரணத்திற்காகப் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் தேனி மாவட்டத்தில் கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்படும்போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி மாவட்ட பழனி செட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுச் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் தனக்கு விசாரணை வழங்க வேண்டும் எனச் சவுக்கு சங்கர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
இதனிடையே வழக்கு தொடர்பான சில ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சவுக்கு சங்கர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கஞ்சா வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.


