
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதி உள்ளனர்…
சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரபலங்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாகச் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்தியுள்ளது. சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள்மீது புகார் அளிக்கப்படவில்லை என்றாலும் அரசு மற்றும் காவல் துறையினர் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாமெனச் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டுள்ளதை கடிதத்தில் அவரகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் அது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் வகையில் இருக்கும். எனவே அரசின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுப்ரீம் கோர்ட்டு கூறியதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதி உள்ளனர்.



