
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி வீடு, நான்கு நட்சத்திர தங்கும் விடுதிகள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் வல்லுநர்களின் உதவியுடன் சோதனை நடைபெற்றது.
புதுச்சேரி ஆனந்தரங்க பிள்ளை வீதியில் உள்ள புரொமினேட் உணவகம், ஈஸ்வரன் வீதியில் உள்ள உணவகம், காந்தி வீதியில் உள்ள நட்சத்திர விடுதி ஆகியவற்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மின்னஞ்சலில் மிரட்டல் வந்தது. இதையடுத்து அவ்விடங்களில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் திடீரெனப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் மின்னஞ்சலில் மிரட்டல் வந்தது. இதையடுத்து முதலமைச்சர் வீட்டிலும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் அலுவலகம், அவர் வழிபடும் ஆலயம் ஆகியவற்றில் சோதனை செய்த அதிகாரிகள் வெடிகுண்டு ஏதும் இல்லை என அவரிடம் தெரிவித்தனர்.
ஜிப்மர் மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணைநிலை ஆளுநர் மாளிகை ஆகிய இடங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தன. இதனால் மிரட்டலின் பின்னணியைக் கண்டறியப் புதுச்சேரி காவல்துறையினர் தேசியப் புலனாய்வு முகமையின் உதவியை நாடி உள்ளனர்.



