
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர், சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில், 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிறுமி உடலைச் சாக்கு பையில் போட்டு, கழிவுநீர் கால்வாயில் வீசியிருந்தனர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ்,19, விவேகானந்தன்,56, ஆகியோர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நைசாகப் பேசி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், அவர்களைக் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறையின் கழிவறையில் விவேகானந்தன் துண்டால் தூக்கு போட்டுத் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. உடலை மீட்டச் சிறைக் காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

