Piracy: இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்!

Advertisements

Piracy | Sri Lanka | Tamil Nadu | Fishermen

தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்து சென்றனர்…

நாகை:நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மணிவண்ணன், பொன்னுசாமி, வடுகநாதன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 5 பைபர் படகுகளில் 19 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவுக் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் வலைவிரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடல் கொள்ளையர்கள் 6 பேர் 2 பைபர் படகுகளில் அங்கு வந்தனர். அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறிக்கொண்டு தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதுடன் மீனவர்கள்மீது தாக்குதலும் நடத்தினர்.

மேலும் மீனவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 5 ஜி.பி.எஸ். கருவிகள், பேட்டரிகள், 500 கிலோ மீன்கள், 30 லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களைப் பறித்துவிட்டு, மீனவர்களைக் கரைக்கு செல்லும்படி விரட்டினர். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களிடம் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், மீன்வள அதிகாரிகள் மற்றும் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் அனைத்து மீனவர்களுக்கும் உள்காயம் ஏற்பட்டுள்ளது. வானவன்மகாதேவியை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கம்பியால் தாக்கப்பட்டு அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் மற்றும் கடல் கொள்ளையர்களால் மீன்பிடி தொழிலுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக வேதாரண்யம் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *