Pamban Bridge Protest: பாம்பன் போராட்டத்தில் குதிக்கும் கோவை காங்கிரஸார்!

இலங்கை அரசின் தமிழக மீனவர்கள்மீதான விரோதப் போக்கைக் கண்டித்து  நாளை  இராமேஸ்வரம்  பாம்பன் கடலில் இறங்கி நடைபெற உள்ள  மனித சங்கிலி போராட்டத்தில் கோவையிலிருந்து திரளான காங்கிரசார் கலந்து கொள்ள உள்ளதாகக் கோவை  மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 03 தேதி அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்குத் தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக  இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்,  ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள்மீதான விரோதப் போக்கைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை  தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், நாளை  இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலைத் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர்.  கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி  காமராஜ் பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர், மீனவர்களின் உரிமைகளுக்கான இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள கோவையிலிருந்து  திரளான காங்கிரசார் செல்ல உள்ளதாகத் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின்  மாநில பொது குழு உறுப்பினர் வீனஸ் மணி, இருகூர் சுப்ரமணியம், வட்டார தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பொது செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *