பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரைப் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் அருள் பாக்கியம், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்துள்ளார்.
எட்டாம் வகுப்பு மாணவனிடம், ஆசிரியர் அருள் பாக்கியம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான அந்த மாணவன், வீட்டுக்குச் சென்றதும் இது குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவனுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர் அருள் பாக்கியம் மீது குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் அருள் பாக்கியத்தைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

