
ஆலங்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் . இவரை தொடர்ந்து ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினரான வைத்திலிங்கம் திமுகவில் இணைய போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவை சேர்ந்த மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகராஜ் உள்ளிட்ட அதிமுக புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருவதால் திமுக மேலிடம் தற்பொழுது மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறது,வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக மேலிடம் பழைய பார்முலா ஒன்றை பட்டை தீட்டி தற்போது செயலாக்க இருக்கிறது.
அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேமுதிக மற்றும் மதிமுக புள்ளிகளை திமுகவுக்கு வரவழைத்தது போல தற்பொழுது அதிமுக புள்ளககளை வளைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.இதற்காக கொங்கு பகுதி டெல்டா பகுதிகளில் உள்ள அதிமுக பள்ளிகளை திமுக பக்கம் இழுப்பதற்கான தீவிர பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன . இதற்காக சில அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக தரப்பில் கடந்த ஆண்டு முதலே பணிகளை தொடங்கி விட்டார்கள். இதற்காக அமைச்சர்கள் கே என் நேரு , உதயநிதி ஸ்டாலின், போன்றோர் தலைமையில் ஒரு குழு அமைத்து அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணி அமைப்பது உள்பட தேர்தல் யுக்திகளை அமைத்து வருகிறார் . இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவில் அதிருப்தியாக இருக்கும் நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் வேலைகளை திமுக தரப்பு மிக வேகமாக தொடங்கி விட்டது.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் , மருது அழகுராஜ் , மைத்ரேயண் ஆகியோர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
முன்னதாக அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற சேகர்பாபு , அனிதா ராதாகிருஷ்ணன் , செந்தில் பாலாஜி , முத்துச்சாமி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்க தமிழ்ச்செல்வன் தோப்பு வெங்கடாசலம் போன்றவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பொறுப்பு தருவதோடு அமைச்சர் பதவியும் தருவதாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் அதிமுக முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு இழுப்பதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்தலாம் . அதேசமயம் அதிமுகவை சார்ந்த ஓட்டுகள் திமுகவுக்கு மாறும் என திமுக தரப்பில் செயல்பட்டு வருகிறார்கள்.
தற்பொழுது அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்தி லிங்கத்துக்கு குறி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் அணியிலிருக்கும் வைத்திலிங்கம் பலமுறை அதிமுகவோடு இணைவதற்கான முயற்சிகளை செய்து வந்தார். ஆனால் அது நடைபெறவில்லை எனவே அவர் திமுக பக்கம் சாயலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஒரத்தநாடு தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவர் வைத்திலிங்கம் . கடந்த 2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகவும் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை வீட்டு வசதி மற்றும் ஊரக வீட்டு வசதி துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். இதற்கு பின்னர் தனது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரமிக்க நபராக வலம் வந்தவர் வைத்திலிங்கம் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மட்டும் அல்ல சோழமண்டல பகுதியிலும் கொடிகட்டி பறந்தவர்.ஒரத்தநாடு தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தோல்வியை எதிர்கொண்டார். இதன் பிறகு ஏராளமான அளவில் பணச் செலவு செய்து 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதே ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்பொழுது தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசல்களுக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் வைத்திலிங்கத்தை திமுகவுக்கு இழுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன் நின்று நடத்துவதாக தெரிகிறது.
திமுகவில் இணைவது தொடர்பாக வைத்திலிங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக சொல்கிறார்கள் . அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் வைத்தியலிங்கம் எந்த நேரமும் திமுகவில் இணையலாம் என்ற பரபரப்பு பேச்சு நிலவுகிறது.


