
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாகவும், இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல, காரைக்காலில் மிக கனமழைக்கும், புதுச்சேரியில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இந்த சூழலில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.


