Narendra Modi: “தென் மாநிலங்களில், பாஜக கூட்டணிக்கு அமோக ஆதரவு”… பிரதமர் மோடி மகிழ்ச்சி!

Advertisements

புதுடெல்லி: தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என் டி ஏ) அமோக ஆதரவு இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நான் இன்று ஜக்டியால், ஷிவ்மோகாவில் பிரச்சாரம் செய்கிறேன். மாலை கோவையில் சாலைப் பேரணியில் பங்கேற்கிறேன். தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் ‘என்டிஏ’வுக்கு பலத்த ஆதரவு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனாகட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) கர்நாடகாவின் சிவமோகாவில் பிரதமர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தத் தொகுதியில் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான  எடியூரப்பாவின் மகனை எதிர்த்துப் பாஜகவின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா சிகிச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்து இருப்பதால் இந்தத் தொகுதியில் பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று மாலை அவர் தமிழகம் வருகிறார். 2024 தொடங்கியதிலிருந்து பிரதமர் தமிழகம் வருவது இது 6வது முறை. கோவையில் வீதி உலா, சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுக்கூட்டம் எனப் பிரதமர் பங்கேற்கிறார்.

தென் மாநிலங்களைக் குறிவைத்து பிரதமர் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் நிலையில், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்டிஏவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலைக் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”கடந்த ஒரு வாரமாகத் தென்னிந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பிரதமரின் வருகை தமிழகத்தில், பாஜகவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *