முதலமைச்சர் விஜய் அலுவலகத்தை சொகுசாக்க மக்களின் வரிப்பணம் 6 கோடியே 17 இலட்சம் ரூபாயைச் செலவிடுவதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், முதலமைச்சர் விஜய் தனது அலுவலகத்தை சொகுசாக்க மக்களின் வரிப்பணம் 6 கோடியே 17 இலட்சம் ரூபாயை வாரி இறைத்ததைக் கண்டித்துள்ளார்.
ஒருபுறம் ஆயிரத்து 200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, மறுபுறம் தற்காலிகமாக அலுவலகத்தை மாற்ற இத்தனை கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன்? என்று வினவியுள்ளார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாக்கச் சரியான சேமிப்புக் கிடங்குகள் இன்றித் தவித்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய தொகையைத் தற்காலிக அலுவலகத்திற்காகச் செலவிட மனச்சாட்சி உறுத்தவில்லையா? என்று வினவியுள்ளார்.
இது போன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, அந்த நிதியைத் தமிழக மக்களின் நலன் காக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்குச் செலவிட வேண்டும் என்று நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


