Murder: திருமணத்திற்கு பிறகும் தொல்லை.. பஸ் டிரைவரைத் தீர்த்துக்கட்டிய முன்னாள் காதலி!

Advertisements

ராய்ச்சூரில் டிரைவர் கொலை வழக்கில் முன்னாள் காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராய்ச்சூர்: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா பாலகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா. டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மாருதி என்பவரின் மனைவி புஷ்பவதிக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார். இதனை அறிந்த மாருதி, காதர் பாஷாவை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனாலும் காதர் பாஷா, புஷ்பவதிக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாருதி தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து நேற்று முன்தினம் காதர் பாஷாவை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தார். மேலும் நடந்த சம்பவங்களைக் கூறி மஸ்கி புறநகர் போலீசில் சரண் அடைந்தார்.

இந்த நிலையில் மாருதி கொடுத்த தகவலின் பேரில் அவரது மனைவி புஷ்பவதி, மது, பாண்டு, கோவிந்தப்பா ஆகிய 4 பேரைப் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது காதர்பாஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கும், புஷ்பவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது புஷ்பவதிக்கு திருமணம் ஆகவில்லை. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே மாருதியுடன் புஷ்பவதிக்கு திருமணம் ஆகி உள்ளது. இதனால் புஷ்பவதி, காதர் பாஷாவுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தி உள்ளார். செல்போன் எண்ணையும் மாற்றி உள்ளார். இந்த நிலையில் புஷ்பவதியின் செல்போன் எண் காதர் பாஷாவுக்கு கிடைத்துள்ளது. இதனால், அவர் புஷ்பவதிக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி காதலை தொடர வலியுறுத்தித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றிப் புஷ்பவதி, தனது கணவர் மாருதியிடம் கூறினார்.

இதனால் மாருதி, காதர் பாஷாவை அழைத்து எச்சரித்தும் அவர், தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாருதி, தனது மனைவி மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து காதர் பாஷாவை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *