Muniyandi Swami Temple Festival: 200 ஆடுகள் 300 கோழிகள்.. விடிய விடிய அசைவ பிரியாணி!

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.

வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *