Mekedatu Issue: காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும்!

Advertisements

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும் என கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். மேகதாது அணையை கட்டுவதற்காகவே நான் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்து வருகிறேன். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும்.” என்றார்.

முன்னதாக, பெங்களூரு ஊரகத் தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரர் டி.கே.சுரேஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த டி.கே.சிவக்குமார், ஒரு தொழில் ஒப்பந்தத்திற்காக வந்திருப்பதாக கூறினார். தனது சகோதரருக்கு வாக்களித்தால், காவிரி நதி நீரை வழங்குவதை உறுதி செய்வேன் என அவர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பகிர்ந்த பாஜகவினர், “மக்கள் யாருக்கு வாக்களிக்க விரும்பினாலும், அவர்களுக்கான வசதிகளை வழங்குவது ஒரு அமைச்சரின் பொறுப்பு. ஆனால், அமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிகார துஷ்பிரயோகத்தில் மிரட்டி வாக்கு சேகரிக்கிறார்.” என விமர்சித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள டி.கே.சிவக்குமார், “பிரச்சனைகளை தீர்க்க நாங்கள் இருக்கிறோம். அது எங்கள் கடமை, அதனை நாங்கள் செய்கிறோம். மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் எப்படியாவது அவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்.” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *