Mamata Banerjee: ஜெயலலிதா பாணியில், “மோடியா, தீதியா?”பிரசாரம்… மம்தா பானர்ஜி அதிரடி!

கொல்கத்தா:தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, “மோடியா, லேடியா?” என்ற கோஷத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்ததைப் போல் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி,” மோடியா தீதியா (மம்தாவா)? இந்த முழக்கத்தை முன்வைத்துத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் கட்சிகளை ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கு வங்காளத்தில் தற்போது பணம் வாய்ந்த கட்சியாக மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் திகழ்கிறது. மற்ற கட்சிகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது பள்ளம் வாய்ந்த கட்சியாகப் பாஜக விளங்கி வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.

கொல்கத்தாவில் “ஜன கர்ஜன்” (மக்கள் கர்ஜனை) என்ற பெயரில் நேற்று மாலை நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மம்தா பானர்ஜி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவை கடுமையாக எதிர்த்த அதிமுக முதல் அமைச்சர் ஜெயலலிதா “மோடியா லேடியா?” இந்த முழக்கத்தை முன்வைத்துப் பாஜகவை வீழ்த்தினார்.

அதே பாணியில் தற்போது தனக்கு எதிராக வியூகம் அமைத்துள்ள பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜியும் “மோடியா தீதியா?” (அதாவது மேற்கு வங்காள மக்கள் மம்தாவை சகோதரி (தீதி) என அன்புடன் அழைப்பது வழக்கம்) என்ற கோஷத்தை முன்வைத்துத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்.

2019 தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக ஆழமாகக் காலூன்ற தொடங்கியுள்ளது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களைப் பாஜக கைப்பற்றியது.

இது, கிழக்கு மாநிலங்களில் அக்கட்சிக்கு அதுவரை கிடைத்திராத மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. 2021 சட்டப் பேரவை தேர்தலிலும் முக்கிய எதிர்க்கட்சிகளான சிபிஎம் மற்றும் காங்கிரஸை ஓரம்கட்டிவிட்டு பாஜக 77 இடங்களைப் பிடித்தது. இதையடுத்து, பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

அப்போது முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைப் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மக்களுக்கான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தாமல் அடுத்தவரைக் குறைசொல்லியே மம்தா ஆட்சி நடத்தி வருவதாகப் பாஜக குற்றம் சாட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதில், மேற்கு வங்க மாநில மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்ற முழக்கத்தை முன்னெடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மம்தாவுக்கு அடுத்தபடியாகக் கட்சியில் இரண்டாவது இடத்தில் உள்ள அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளதாவது:-

” 2024 தேர்தல் வங்க மக்களுக்கும் (திரிணமூல்), வெளிநபர்களுக்கும் (பாஜக) இடையில்தான் போட்டி. முன்பெல்லாம் திருடர்கள் சிறைக்குப் போனார்கள். இப்போது பாஜகவில் தஞ்சம் அடைகின்றனர். இதுதான் மோடியின் உத்தரவாதம்.

மறுபக்கம் ஏழைப் பெண்கள் இன்னும் தகர கூரையின் கீழ்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஹவாய் செருப்பைத்தான் அணிகிறார்கள். மோடியின் ஆட்சியில் இதுதான் நிலைமை.

இந்த நிலையில், “வங்கத்துக்கு யார் வேண்டும். மோடியா அல்லது தீதியா (மம்தா)?. வங்கத்தை ஆள்வது இந்த மண்ணின் மைந்தரா அல்லது அந்நியர்களா?” என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வங்க எதிர்ப்புச் சக்திகளை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டதை இந்தக் கூட்டம் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

வங்க மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வங்கத்தின் குரலை அடக்க நினைக்கின்றனர். அந்த அந்நியர்களை இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்”.
இவ்வாறு அபிஷேக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *