வக்பு வாரியத்துக்கு வழங்கிய மானியத்தை திரும்ப பெற்றது மகாராஷ்டிரா அரசு!

Advertisements

வக்பு வாரியத்துக்கு கூடுதலாக ரூ.10 கோடி மானியம் வழங்கப் பிறப்பித்த உத்தரவை மகாராஷ்டிரா அரசு நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது.

மகாராஷ்டிரா வக்பு வாரியத்தை வலுப்படுத்த 2024-25-ம் ஆண்டுக்கு ரூ.20 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரூ.2 கோடியைச் சிறுபான்மை வளர்ச்சி துறை கடந்த ஜூன் மாதம் வழங்கியது. இந்நிலையில் மேலும் ரூ.10 வழங்க வக்பு வாரியத்திடமிருந்து வேண்டுகோள் வந்தது. இதையடுத்து ரூ.10 கோடி வழங்க மகாராஷ்டிர அரசு கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. வக்பு வாரியத்தின் செலவுகள் விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்குப் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசியலமைப்பு சட்டத்தில் வக்பு வாரியத்துக்கு இடமில்லை எனவும், வக்பு வாரியத்துக்கு மானியம் வழங்கும் முடிவை அரசு நிர்வாக அதிகாரிகள் எடுத்துள்ளனர் எனப் பாஜக கூறியது.

மகாராஷ்டிரா பாஜக எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவலில், ‘‘மகாராஷ்டிரா வக்பு வாரியத்துக்கு பாஜக தலைமையிலான மகாயுதி அரசு ரூ.10 கோடியை உடனடியாக வழங்கியுள்ளதாகப் பொய் செய்தி பரவுகிறது. இதற்குப் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மகாராஷ்டிரா அரசின் முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘‘புதிய அரசு பதவியேற்கவுள்ள நிலையில், பொறுப்பில் இருக்கும் அரசு மானியம் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றுவது பொருத்தமற்றது. புதிய அரசு பதவியேற்றவுடன், இந்த விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்படும். ’’ என்றார்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் வக்பு வாரியத்துக்கு மானியம் வழங்கப் பிறப்பித்த உத்தரவை மகாராஷ்டிர அரசு திரும்பபெற்றுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *