மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது…
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது, வேலூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், அதற்கான மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா என்றும் பேசினார்.
அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி, முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த 31ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்கில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, முருகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முருகன் மீதான வழக்கை இன்னும் 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


