
Kerala Wayanad Landslides Latest News Updates: தொடர் மழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (ஜூலை 30) நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்குச் சுமார் 2 கி.மீத்தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2ஆவது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
தனியாகத் தவிக்கும் 400 குடும்பங்கள்
பள்ளிகள் நிவாரண முகாம்களாகச் செயல்பட்டு வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் வீடுகள், கடைகள் அனைத்தும் வெள்ளத்தாலும், மண்ணாலும் அடித்துச்செல்லப்பட்டது. சூரல்மலை பகுதியில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ல பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது. முண்டகையிலிருந்து அட்டாமலை பகுதிக்குச் செல்ல அந்தப் பாலம் மட்டுமே இருந்தது. தற்போது பாலம் இடிந்ததால் மீட்புப் பணி கடினமாகி உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் 400 குடும்பங்கள் சிக்கியிருப்பதாகவும், பாலம் இடிந்த நிலையில் மீட்புப் பணி தாமதமாகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த ஆற்றை மீட்புப் படையினர் கடந்துவிட்டனர். மாலை 5 மணிக்குள் முண்டக்கை பகுதியில் இருள் சூழந்துவிடும் எனத் தெரிவித்த கல்பட்டா எம்எல்ஏ டி.சித்திக், அதற்கு முன் மீட்புப் பணியை நிறைவு செய்ய முயன்று வருகிறோம் என்றார்.
முதல்வரின் X பதிவு
அங்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சிலரின் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டது. மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள்குறித்த முழு விவரங்கள் இன்னும் தெரியவில்லை. நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கி உள்ளார். அமைச்சர்கள் மேற்பார்வை மற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர், முழு அரசு இயந்திரமும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார். மீட்புப் பணியில் மாநில அரசு ராணுவத்திடம் உதவியை நாடியது. இதைத் தொடர்ந்து உதகை வெல்லிங்டனிலிருந்து மெட்ராஸ் படைப்பிரிவு வயநாட்டிற்கு புறப்பட்டது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், கல்பட்டா எம்எல்ஏ டி. சித்திக் ஆகியோர் மீட்புப் பணியை ஒருங்கிணைக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள்
தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் படையில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையில் கூடுதல் வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்தப் பகுதியில் தனியாகச் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அமைச்சர் ராமசந்திரன் கடன்னப்பள்ளி சம்பவ இடத்திற்கு விரைந்தார். இன்னும் சில அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
சூலூர் விமானப்படையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் வயநாட்டிற்கு விரைகிறது. கன்னூர் பாதுகாப்பு படைகளில் 2 குழுக்கள் வயநாட்டிற்கு சென்றிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை அவசர கட்டுப்பாட்டு அறைகளைச் செயல்படுத்தி உள்ளன.
அவசர மருத்துவ உதவிக்கு 8086010833 மற்றும் 9656938689 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளவும். கல்பெட்டா, மேப்பாடி, வைத்திரி, மானந்தவாடி ஆகிய மருத்துவமனைகளில் அனைத்து அவசர தேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்தார்.
நிவாரணம் அறிவிப்பு
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவரது X பதிவில்,”வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்கத் தமிழக அரசு தயாராக உள்ளது” என்றார்.



