
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உண்மையைக் கண்டறிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் கரூருக்கு வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் பாஜக உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூட்ட நெரிசலுக்கான முதன்மைக் காரணிகள் என்ன? என்றும், நெரிசலைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்றும் வினவியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், பகிர்ந்துகொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூர்த் துயரம் குறித்து நீதிபதியின் விரிவான அறிக்கையை அளிப்பதற்கான காலக்கெடு உள்ளதா? என்றும், நீதிபதி கண்டறிந்த உண்மையைப் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும் அனுராக் தாக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
