
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், இங்குத் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 21 குழந்தைகள் உயிரிழந்தது தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்தது உலக அளவில் மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோல்டிரிப் மருந்தைத் தயாரித்த ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக எந்தச் சோதனையும் நடத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக, இப்போதைய திமுக அரசுகளின் அலட்சியத்தால், ஸ்ரீ சான் பார்மா நிறுவனம் மொத்தம் 364 விதிமீறல்களைக் கடந்த 14 ஆண்டுகளில் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கக் கடந்த 60 ஆண்டுக்காலத் திராவிட ஆட்சிகளில் நிலவும் ஊழல் முறைகேடுகளே அடிப்படைக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இயங்கும் மருந்து நிறுவனங்களில் முறையான ஆய்வுகள் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டுமெனச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
