ஈரானில் பெரும் பொருளாதார ஆபத்து.. ரியால் வரலாறு காணாத வீழ்ச்சி!

ஈரானின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் தேசிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.இந்த ரியால் சரிவு ஏன்.? எதனால் ஈரான் பொருளாதாரத்தில் இந்தளவுக்கு அடிவாங்கியது.? இதற்கு சொல்லப்படும் முக்கிய காரணங்கள் என்ன.? விலைவாசி உயர்வால் ஈரானிய மக்களின் மனநிலை தற்பொழுது எப்படி உள்ளது என்பது குறித்து தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!

சமீபத்திய தகவலின்படி, செப்டம்பர் 29 அன்று ஈரானின் தடையற்ற சந்தை எனப்படும் free market-ல் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2.5 மில்லியன் ரியாலைத் தாண்டியது. ஒரு கட்டத்தில் டாலருக்கு 2.548 மில்லியன் ரியால் வரை சென்றதாக பஷிசி உள்ளிட்ட சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முந்தைய நாளே டாலர் 2.4 மில்லியன் ரியாலைத் தொட்டிருந்தது. அதாவது, ஒரே சில நாட்களில் ஈரான் நாணயத்தின் மீது ஏற்பட்ட அழுத்தம் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன.

ஏன் இவ்வளவு பெரிய வீழ்ச்சி?

இதற்கு ஒரே ஒரு காரணம் என்று சொல்ல முடியாது. அமெரிக்க பொருளாதாரத் தடைகள், பணவீக்கம், போர் சூழல், எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாட்டு நாணய பற்றாக்குறை, வர்த்தகத் தடைகள் என பல காரணிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ரியாலின் மதிப்பை கடுமையாக பாதித்துள்ளன.

பல ஆண்டுகளாகவே ஈரான் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள போர் மற்றும் பிராந்திய பதற்றம் காரணமாக அந்த பொருளாதார அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, எண்ணெய் ஏற்றுமதி ஈரானின் மிக முக்கியமான வெளிநாட்டு வருவாய் ஆதாரங்களில் ஒன்று. எண்ணெயை விற்று கிடைக்கும் டாலர் வருவாய் குறைந்தால்,

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்குவதற்குத் தேவையான அந்நியச் செலாவணி ஈரானிடம் குறையும். அந்த நிலை நீடித்தால், டாலருக்கான தேவை அதிகரிக்கும்; ரியாலின் மதிப்பு மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகும். இந்நிலையில் , பணவீக்கம்… அடுத்த மிகப்பெரிய பிரச்சினை. ரியால் வீழ்ச்சியின் தாக்கம் வெறும் நாணயச் சந்தையுடன் முடிவதில்லை. ஈரானில் ஆண்டு பணவீக்கம் 61.4 சதவீதத்தை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.அதிலும் குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 128.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம் என்ன?

ஒரு குடும்பம் கடந்த ஆண்டு ₹100-க்கு இணையான தொகையில் வாங்கிய உணவுப் பொருட்களுக்கு, இப்போது அதைவிட மிகப்பெரிய தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது. அதனால், நாணய மதிப்பு சரிவு → இறக்குமதி செலவு அதிகரிப்பு → பொருட்களின் விலை உயர்வு → பணவீக்கம் அதிகரிப்பு → பொதுமக்களின் வாங்கும் திறன் குறைவு என்ற சுழற்சி உருவாகிறது.

போரின் தாக்கம் என்ன?

இப்போது ஈரானின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ள போர் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. சமீப மாதங்களில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கைகள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வருவாயை பாதித்துள்ளதாக Washington Post உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஈரானுக்கு வெளிநாட்டு நாணயத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், Strait of Hormuz விவகாரமும் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்த நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றம், ஈரானின் பொருளாதாரத்தையும் சர்வதேச எண்ணெய் சந்தையையும் ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடியதாக உள்ளது.

தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தடைகள், எண்ணெய் ஏற்றுமதி மற்றும் Strait of Hormuz தொடர்பான விவகாரங்களில் இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.

பொதுமக்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம்?

ரியால் வீழ்ச்சியின் மிகப்பெரிய தாக்கம் சாதாரண மக்களிடமே தெரிகிறது. உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, மக்களின் வருமானம் அதே வேகத்தில் உயர்வதில்லை. இதனால் சேமிப்பு குறைகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மேலும் விலை உயர்கின்றன.

சில குடும்பங்கள் உணவுப் பொருட்களிலேயே செலவைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரியால் எவ்வளவு வேகமாக சரிந்துள்ளது? இதை புரிந்துகொள்ள சமீபத்திய எண்ணிக்கைகளைப் பார்த்தாலே போதும். ஆகஸ்ட் மாதத்தில்: டாலர் சுமார் 2 மில்லியன் ரியால் என்ற அளவை எட்டியது.

செப்டம்பர் 28: டாலர் சுமார் 2.4 மில்லியன் ரியால் என்ற புதிய record-ஐ எட்டியது. செப்டம்பர் 29: அதையும் கடந்து 2.5 மில்லியன் ரியாலுக்கும் மேல் சென்றது; intraday-ல் சுமார் 2.548 மில்லியன் ரியால் வரை பதிவானது. அதாவது, தொடர்ச்சியாக புதிய வரலாற்றுக் குறைந்த மதிப்பை ஈரான் ரியால் பதிவு செய்து வருகிறது.

அடுத்து என்ன நடக்கும்?

இப்போது உலக நாடுகளின் கவனம் இரண்டு விஷயங்களில்தான் உள்ளது. ஒன்று – அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை. இரண்டு – Strait of Hormuz தொடர்பான பதற்றம் குறைகிறதா என்பதுதான். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, தடைகள் தளர்ந்து, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு வாய்ப்பு அதிகரித்தால், வெளிநாட்டு நாணய வருவாயில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படலாம்.

ஆனால் மோதல் நீடித்து, தடைகள் மற்றும் வர்த்தகத் தடைகள் மேலும் தீவிரமானால், ரியால் மீது தொடர்ந்து அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தற்போது உறுதியாக என்ன நடக்கும் என்று கூறக்கூடிய நிலை அல்ல; ஆனால் தற்போதைய தரவுகள் ஈரானிய பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தில் இருப்பதை காட்டுகின்றன.

ஒரு டாலருக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான ரியால்… 61.4 சதவீத பணவீக்கம்… உணவுப் பொருட்களின் விலை 128 சதவீதத்துக்கும் மேல் உயர்வு…இப்படி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ஈரானிய பொருளாதாரம்…

இவை வெறும் பொருளாதார புள்ளிவிவரங்கள் அல்ல.

ஒரு நாட்டின் நாணய மதிப்பு சரிந்தால், அதன் தாக்கம் சந்தையிலிருந்து மக்களின் சமையலறை வரை சென்று சேரும் என்பதற்கு ஈரானின் தற்போதைய நிலை ஒரு முக்கிய உதாரணமாக மாறியுள்ளது. ஒரு நாட்டின் நாணயம் வீழ்வது என்பது வெறும் பொருளாதாரச் செய்தி அல்ல… அது அந்த நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் நெருக்கடி.

ஒரு டாலரின் மதிப்பு 25 லட்சம் ரியாலைத் தாண்டியிருப்பது, ஈரான் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இன்று நாணயச் சந்தையில் தொடங்கிய இந்த சரிவு, நாளை உணவுப் பொருட்களின் விலை, மருந்துகளின் விலை, மக்களின் சேமிப்பு என ஒவ்வொரு துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

போர் நீடிக்குமா…? பொருளாதாரத் தடைகள் தளருமா…? எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புமா…? இந்த கேள்விகளுக்கான பதிலில்தான் ஈரான் ரியாலின் அடுத்தகட்ட பயணம் இருக்கிறது. வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள ஈரான் ரியால்… மீண்டு வருமா? அல்லது இன்னும் ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் ஈரான் செல்லுமா?

அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றமும், பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தொடர்பான முடிவுகளும் அடுத்தகட்டத்தில் ரியாலின் மதிப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *