பணியில் சேர சென்ற IPS அதிகாரி விபத்தில் பலி!

Advertisements

யுபிஎஸ்சி தேர்வில் வென்று பயிற்சியை முடித்து முதல் முதலாகப் பொறுப்பேற்க வந்துகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹர்ஷ் பர்தன், கர்நாடகாவில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றவர் ஆவார். மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் அவர் நான்கு வாரப் பயிற்சியைச் சமீபத்தில் முடித்தார்.’

பயிற்சிக்காலம் முடித்த நிலையில் ஹோலேநரசிபூரில் புரபேஷனரி உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க ஹாசன் மாவட்டத்துக்கு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஹர்ஷ் பர்தன் போலீஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே அவர் பயணித்த போலீஸ் வாகனத்தில் டயர் திடீரென வெடித்ததில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் சாலையோரம் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது மோதியுள்ளது.

இதில் டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹர்ஸ் பர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இளம் அதிகாரி ஹர்ஸ் பர்தன் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். ‘ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் இறந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். ஐபிஎஸ் பொறுப்பேற்கச் செல்லும்போது, இது போன்ற விபத்து நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்போது இப்படி நடந்திருக்கக் கூடாது. ஹர்ஷ் பர்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தனது X பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *