
டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த சந்திரசேகர் ராவின் மகள் கவிதா எம்எல்சி, இன்று அந்த மனுவைத் திரும்பப் பெற்றார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகளும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சி-யுமான கே.கவிதா. டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய ஊழல் வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது கைது நடவடிக்கையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், திடீரென இன்று கவிதா, தனது மனுவைத் திரும்பப் பெற்றார். ஆனால் இதற்கான காரணம்குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.
கவிதா கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரின் பெயர்களை, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இணை சதிகாரர்களாக அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.
அமலாக்கத்துறையின் புதிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய சந்தர்ப்பங்களிலும், அமலாக்கத்துறை இது போன்ற அப்பட்டமான தவறான மற்றும் அற்பமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டது.
டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய வழக்கில் இதுவரை 6 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை, 15 பேரைக் கைது செய்துள்ளது. ரூ.129 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணப் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்குச் சமமான சொத்துகளையும் முடக்கியுள்ளது.

