
போராட்டத்தைக் கைவிடாமல் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டு கட்டாகத் தூக்கிய வேனிற்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசாருக்கும்-அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை: அரசுப் பணி இடங்களில் நிரப்புவதில் முன்னுரிமை, ஆசிரியர் தேர்வு வாரிய நியமன தேர்வை ரத்து செய்துவிட்டு நேரடியாகப் பணியில் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 12-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் முக்கிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கோடம்பாக்கம், வேப்பேரி பூந்தமல்லி சாலையில் அமர்ந்து கடந்த 2 நாட்களாக மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைக் குண்டு கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று 5-வது நாளாகக் கிண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலையில் அலுவலகங்களுக்குச் செல்வோர் சிரமப்பட்டனர்.
இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இவர்களின் போராட்டத்தால் நெரிசலில் சிக்கி நின்றனர். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. போலீசார் அவர்களைக் கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மாற்றுத்திறனாளிகளை குண்டு கட்டாகத் தூக்கி வேனிற்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசாருக்கும்-அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும் போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 பேரைக் கைது செய்ததை அடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது.

