அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் உபகரணங்கள் தடையின்றிக் கிடைப்பதைச் சுகாதாரத்துறை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயைக் கண்டறியும் மருத்துவக் கருவிகள் கூட இல்லாத அவலத்தால் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடி வரும் தவெக தலைமையிலான அரசின் அலட்சியத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அரசு செய்யும் ஆடம்பர விளம்பரச் செலவுக்கான தொகையை ஒதுக்கினாலே, தமிழக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அனைத்து உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளையும் மிக எளிதாக வாங்கியிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் உபகரணங்கள் தடையின்றிக் கிடைப்பதைச் சுகாதாரத்துறை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிஞ்சுக் குழந்தையின் குடும்பத்திற்குத் தேவையான நிவாரண நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.



