
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றின் உரிமை அன்புமணி ராமதாஸிடம் தான் இருக்கிறது என தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் பாமக வழக்கறிஞரான பாலு. இந்த நிலையில் ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் தமிழ்க்குமரனை பாமக இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ராமதாஸ்.
மேலும் இந்த நியமன கடிதத்தை ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு வழங்கியிருக்கிறார் ராமதாஸின் மகளான காந்தி. முன்னதாக காந்தியின் மகன் முகுந்தன் பாமக இளைஞர் சங்க தலைவராக ராமதாஸால் நியமனம் செய்யப்பட்டு பின்பு ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஜிகேஎம் தமிழ்க்குமரனும் இளைஞர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தந்தை மகன் இடையேயான பிளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்த்தாலும், வாரத்தின் வியாழக்கிழமைகளில் செய்தியாளர் சந்திப்பை நடத்தும் ராமதாஸ் ஏதாவது ஒரு கருத்தை கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பை அதிமுகவிலிருந்து சிவி சண்முகம் சந்தித்து பேசிய நிலையில் அவர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சம்மதித்ததாக சொல்லப்பட்டது. அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமி ராமதாஸ் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்மாத இறுதிக்குள் தந்தை மகன் இடையேயான மோதல் முடிவுக்கு வரும் என்றனர் பாமகவினர். இந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல வந்திருக்கிறது ராமதாஸின் அறிவிப்பு.
வழக்கம்போல் வியாழக்கிழமையான இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமதாஸ். அவருடன் அவரது மகள் காந்தி, பாமக முன்னாள் தலைவர் ஜிகே மணி ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கத் தலைவராக ஜிகே மணியின் மகனும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கும் ஜிகேஎம் தமிழ்க்குமரன் நியமிக்கப்படுவதாக கூறினார்.
தொடர்ந்து அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார் ராமதாஸின் மகளான காந்தி. அன்புமணி ராமதாஸ் தலைவராகப் பதவியேற்ற புதிதில் ஜிகேஎம் தமிழ்க்குமரன் இளைஞர் சங்கத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சினிமா தயாரிப்புத் துறையில் இருக்கும் ஜிகேஎம் தமிழ்க்குமரன் கட்சியை வழிநடத்த முடியாது என எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்குப் பிறகு பல நாட்கள் அந்தப் பதவி காலியாகவே இருந்தது. இதற்கிடையே பாமக பொதுக்குழுவில் காந்தியின் மகன் முகுந்தனை இளைஞர் சங்கத் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் கூறிய நிலையில் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி.
சிறிது நாட்களில் முகுந்தனும் இளைஞர் சங்கப் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தான் மீண்டும் ஜிகேஎம் தமிழ்க்குமரனை இளைஞர் சங்கத் தலைவர் பதவியில் நியமிப்பதாக கூறியிருக்கிறார் ராமதாஸ். ஆனால் ராமதாஸின் நியமனம் செல்லாது. அன்புமணி நியமிக்கும் நிர்வாகிகளுக்குத் தான் அதிகாரம் இருக்கிறது. பாமகவைப் பொறுத்தவரை அன்புமணி ராமதாஸ் தான் தலைவர், அதனை தேர்தல் ஆணையமும் உறுதி செய்திருக்கிறது என்கின்றனர் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள்.
