
வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் விவசாய சங்கம் மற்றும் அனைத்தும் தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் 1 மணி நேரத்திற்க்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பது, வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ட ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டமானது நடைபெற்றது.
இதில் பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள சுப்பையா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம்வரை வந்து அங்குச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தொழிற்சங்கங்களின் இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பேருந்து செல்லமுடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

